இலவச விசா முறையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்த பிரச்சினைக்கு அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் (Vijitha Herath) பதிலளித்துள்ளார்.
தற்பொழுது நாடாளுமன்ற கலைக்கப்பட்டுள்ள நிலையில், இலவச விசா முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுவதாகவும் இதனால் இவ்வாறு தாமதம் நீடிப்பதாகவும் அவர் அதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் படி, நாடாளுமன்றம் இயங்காமல் செயற்படுவதற்கான தெரிவுகள் குறித்து ஆராய சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தீர்வு காணப்படும் வரை அல்லது புதிய நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் வரை தாமதம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை தற்போது தனது கடவுச்சீட்டு பிரச்சினையை தீர்க்க முடியாமல் திணறி வருவதாகவும், நீதிமன்ற உத்தரவு காரணமாக புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் அமைச்சர் விஜித மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஹேரத், உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன் இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்க்க புதிய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளினால் இலங்கை தற்போது பழைய முறைமையின் கீழ் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            