இலங்கையின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவிடம் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61E பிரிவு b வின்படி இந்தப் புதிய நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி பெறப்பட்டது.
முன்னதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து பொலிஸ்மா அதிபருக்கான பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.
இதனையடுத்து பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரை புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்து அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பியிருந்தார்.
இந்த நிலையிலேயே பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய இன்றயதினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குற்றங்கள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடளிப்பதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் பிரத்தியேக வட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பிரியந்த வீரசூரியவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முயற்சி, பொதுமக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதையும், குடிமக்களும் காவல்துறை அதிகாரிகளும் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துடன் நேரடியாக தகவல்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன்படி, 071-8598888 என்ற புதிய வட்ஸ்அப் எண், இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
குற்றங்கள் அல்லது பொலிஸ் மா அதிபரின் அவதானம் தேவைப்படும் பிற விடயங்கள் தொடர்பான குறுஞ்செய்திகள், படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புவதற்கு இந்த எண்ணை பயன்படுத்த முடியும்.
இருப்பினும், இந்த எண்ணுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.