இலங்கையில் 13 ஆம் திருத்த நடைமுறைக்கு இந்தியாவில் அழுத்தம்


இலங்கை ஒப்பந்தம் மற்றும் 13ஆவது திருத்தம் குறித்து இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் மனித உரிமை அடிப்படையிலான சமாதானம் மற்றும் அபிவிருத்திகான அமைப்பு இன்று சென்னையில் உள்ள ஊடக மையத்தில் ஒரு அரசியல் கலந்துரையாடல் மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் (எம்.பி) தலைமையில் இந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் தமிழக அரசியல் கட்சி பிரபலங்கள் மற்றும் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணனும் பங்கெடுத்துள்ளனர்.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 1987 இல் கைச்சாத்திப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் 13ஆவது திருத்தச் சட்டம் அடிப்படையில் மாகாண சபைகளின் ஊடாக முழுமையான அதிகாரப் பரவலாக்கம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒப்பந்தத்தின் பிரகாரம் முழுமையான செயலாக்க நடைமுறைகளில் அனாவசியமான தாமதங்களும் தடைகளும் நீடிக்கின்றன.

எனவே இரு நாடுகளின் அரச தலைவர்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழக அரசியல் கட்சிகளூடாக கோரிக்கைகளை முன்வைக்க வேண்டியுள்ள நிலையில், இந்தச் செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.