அதிகரிக்கும் அழுத்தம் - வர்த்தமானி அறிவிப்பை மீளப் பெற தயாராகும் அரசாங்கம்


கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கு எதிராக உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவது அல்லது மீள்திருத்தம் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இதன்படி, பல பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது குறித்து ஆராயுமாறு ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயர்பாதுகாப்பு வலயங்களால் வர்த்தகம் பாதிக்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாற்றுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய அதிபர் சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.