ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான டிபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவமானது தலாவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, விபத்தில் காயமடைந்தவர்கள் அவர்களுடன் வந்த மற்றுமொரு வாகனம் மூலம் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அனுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, காயமடைந்தவர்களில், சாரதி ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தவர் எனவும், ஏனையவர்கள் இலங்கை காவல்துறையில் கடமையாற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்துக்கு சராதியின் தூக்க கலக்கமே காரணம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.