ஜனாதிபதி தேர்தல் : சந்திரிகா தலைமையில் புதிய கூட்டணி, தடுமாறும் மைத்திரி

 ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகள் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இவ்வாறானதொரு நிலையில் சிறீலங்கா சுதந்திர கட்சியும்  புதிய அரசியல்  கூட்டணி அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய கூட்டணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அடிப்படையாகக் கொண்டு புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய கட்சிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க மற்றும் கூட்டமைப்பில் இணையும் ஏனைய அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் உள்ளடங்கும் வகையில் தலைமைத்துவ சபையொன்றை உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கூட்டமைப்பின் 50 வீதம் அதிகாரத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டிருப்பதுடன் ஏனைய கட்சிகள் மீதமான 50 வீதம் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் வகையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய கூட்டணி குறித்து தடுமாற்றத்துடன் காணப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.