ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05 : சஜித் 75 லட்சம் வாக்குகளைப் பெறுவார் கணிப்பு!


ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 05 ஆம் திகதி நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என்பதால் அதற்கு தயாராகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுவுக்கு ஜனாதிபதி தெரியப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய கூட்டணி அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி துரிதப்படுத்தியுள்ளது. வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க ஆகியோர் இதற்கான பணிகளை முன்னெடுத்துவருகின்றனர் எனவும் அறியமுடிகின்றது.

அத்துடன், வடக்கு, கிழக்கை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ரவி கருணாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை பெற்றுக்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் நகர்வுகளை முன்னெடுத்துவருகின்றது.

இதேநேரம் வடக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் இனவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்கமாட்டார்கள், எனவே, இனவாதிகள் இல்லாத கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச 75 லட்சம் வாக்குகளைப் பெறுவார் என தெரியவந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அலை இருக்கின்றது எனக் கூறப்பட்டாலும் தற்போதுள்ள வாக்குவங்கியைவிட சற்று கூடுதல் வாக்கு அக்கட்சிக்கு கிடைக்கும்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்குவங்கி 10 விகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

வடக்கிலும் எமக்கே ஆதரவு உள்ளது. இனவாத கட்சிகளுக்கு அம்மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். எமது அணியில் இனவாதிகள் இல்லை. சஜித் இனவாதம் அற்ற தலைவர். அனைத்து இனத்தவர்களும் அங்கம்வகிக்ககூடிய கட்சி எமது கட்சியாகும்.

அதேவேளை, அடுத்து என்ன தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட்டணியாக எதிர்கொள்வதற்கு செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.” – என்றார்.