தேர்தலுக்கு தேவையான பணம்! ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

அதிபர் மற்றும் பொதுத் தேர்தலுக்கு மொத்தமாக 20 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொதுத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே நாடாளுமன்றத்திற்கும் நிதியமைச்சிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 2025 இல் முடிவடையும் அதே வேளையில் அதிபர் தேர்தல் இந்த வருடம் (2024) நடைபெறவுள்ளது.

இருப்பினும், அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நான்கரை வருடங்கள் நிறைவடைந்த பின்னர் எப்போது வேண்டுமானாலும் அதிபருக்கு நாடாளுமன்றத்தை கலைக்க அதிகாரம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் அதிபர் தேர்தலை நடத்தாமலே நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை ஒழிக்கும் மோசமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிறது.

இவ்வாறான சூழலில், இந்த ஆண்டு (2024) அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் உறுதியளித்து அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.