துரோகிகளாக போகின்றீர்களா..? தீர்மானம் உங்கள் கையில் என்கிறார் ஜனாதிபதி


  நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் என்று முத்திரை குத்திக் கொள்ளப் போகிறோமா?அல்லது நாட்டை நேசித்த குழுவாக அடையாளப்படுத்தப்பட போகின்றோமா? என்ற இரு முடிவுகளில் ஒன்றை எடுக்க வேண்டும் என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய விசேட உரையின் போது இதனைத் தெரிவித்த அவர்,
  

நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணியை நான் பொறுப்பேற்றப் பின்னர், பொருளாதாரத்தின் உண்மையான நிலை குறித்த அனைத்துத் தகவல்களையும் அவ்வப்போது இச்சபையில் கூறியுள்ளேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுத்த பொருளாதார திட்டங்களையும் எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்கள் குறித்த உண்மைகளையும் கூறினேன். பற்றி எரிந்துகொண்டிருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன். நாடு நரகமாக மாறியிருந்தது. பொருளாதாரம் முடங்கிக் கிடந்தது. பணவீக்கம் 70 சதவீதமாக உயர்ந்திருந்தது.

மொத்த தேசிய உற்பத்தியில் 10-12 சதவீதத்திற்கும் அதிகமாக வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை அதிகரித்திருந்தது. வட்டி வீதம் 30 சதவீதமாக உயர்ந்திருந்தது. டொலரின் பெறுமதி சுமார் 450 ரூபா வரையில் அதிகரித்திருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு பூஜ்ஜியமாகிப் போனது.

ஒரு வாரத்திற்கு கூட உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய பணம் இருக்கவில்லை. நாட்டில் பெரும்பகுதியானோர் வீதிகளில் இறங்கினர். பல நாட்களாக மக்கள் வரிசையில் நின்றனர். பல எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில்தான் நாட்டையும் பொருளாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்பும் சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த நேரத்தில் நாட்டைக் காப்பாற்றும் சவாலை ஏற்க எவரும் முன்வரவில்லை. பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்தனர். ஆனால் நான் நிபந்தனையின்றி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டேன். பாராளுமன்றத்தில் எனது கட்சிக்கு ஒரே ஒரு ஆசனம் மட்டுமே இருந்தது.
அத்தகைய ஆபத்தான சூழலிலே இந்தப் பணிகளை தோளில் ஏற்றுக்கொண்டேன். மூன்று காரணங்களுக்காகவே சவாலை ஏற்றுக்கொண்டேன். என்னிடம் ஒரு திட்டம் இருந்தது. அனுபவம் இருந்தது. சர்வதேச தொடர்புகள் இருந்தன. அதனால், நரகத்தில் விழுந்த இந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கையும் என்னிடம் இருந்தது.

அப்போதிருந்து, நாங்கள் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்களை முறையாக செயல்படுத்த ஆரம்பித்தோம். இதன் பலனாக, 2023 ஆம் ஆண்டின் மத்தியில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது.இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி குறைந்தது மூன்று சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
சவாலான, கடினமான, சரியான பாதையை நாங்கள் பின்பற்றியதால் இந்த நிலையை எங்களால் அடைய முடிந்தது.

2024 ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவாக வழங்கப்பட்டது. தற்போது 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டது. வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும் போது இது போதுமானதாக இல்லை.  இருப்பினும் அரசாங்கத்தினால் இயன்ற அளவில் இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரூபாயின் பெறுமதி அதிகரித்திருப்பதால், கடந்த சில மாதங்களில் இறக்குமதி பொருட்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் எரிவாயு, கனிய எண்ணெய் , பால்மா போன்றவற்றின் விலைகளும் குறைந்தன. மேலும், வட்டி வீதம் குறைவதால் தொழில் துறையினருக்கும் நிவாரணம் கிடைக்கும்.

எனவே  நாட்டை மீட்டெடுக்க நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு எதோ ஒரு வகையில் பங்களிப்பதற்கான இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். அனைவரும் சேர்ந்து இந்த மலர்த்தட்டில் கைவைப்போம். இன்று நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை வைத்தே எமது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.