இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், 13ஆம் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று காலை இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மாலை 6.15 அளவில் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியிருந்தார்.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது அறிவித்துள்ளார்.
அதேநேரம் எதிர்வரும் நாட்களில் இந்தியப் பிரதமரை இலங்கை விஜயம் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி, 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் வினைத்திறனாகவும் அமுல்படுத்துதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துதல் என்பன நல்லிணக்க நோக்கங்களை எளிதாக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியதாகக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பேணுகின்ற அதேவேளையில், சமத்துவம், நீதி, கண்ணியம், சமாதானம் போன்ற விடயங்களில் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகங்களினதும் அபிலாஷைகளுக்கும் இந்தியா ஆதரவை வழங்கும் என இதன்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்கள் தொடர்பான கவலையையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பிலும் அவர்களுக்கான அபராதத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான ரீதியிலான அணுகுமுறை இந்தப் பிரச்சினை தீர்ப்பதற்கு உதவும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கையைப் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதன்போது குறிப்பிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேசக் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியாவின் ஆதரவை எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.