அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்ய தயார் : நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

அரச சொத்துக்கள் முகாமைத்துவ சட்டத்தின் ஊடாக இலங்கையிலுள்ள (Sri Lanka) அனைத்து அரச நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை செய்து முறையான முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

அத்துடன் 1,600 க்கும் மேற்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளதாகவும், அவற்றின் சொத்துக்கள் சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அந்த நிறுவனங்களில் சுமார் 91,000 வாகனங்கள் இருப்பதாகவும் நிலையான சொத்துக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்து மக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நிதியமைச்சர் என்ற வகையில் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார மாற்றத்துக்கான சட்டமூலம் மீதான விவாதம் நாளை (25) விவாதிக்கப்படவுள்ளதுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார சீர்திருத்தம் தொடர்பான சட்ட கட்டமைப்புகள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும் எனவும், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு சாதகமான சூழல் அமையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.