சமூக ஊடகங்களில் பெற்ற படங்களை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரிப்பு : அதிரடியாக சிக்கிய நபர்கள்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.

அதனடிப்படையில்,

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி போலி தேசிய அடையாள அட்டை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட 02 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சந்தேக நபர்களிடமிருந்து 28 போலி தேசிய அடையாள அட்டைகள், 32 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், 03 கையடக்கத் தொலைபேசிகள், 05 போலி தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள், 18 சிம் கார்ட்கள் மற்றும் கணினி ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சந்தேகநபர்கள், தனியார் வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கும் போலித் தகவல்களை பயன்படுத்தி கடன் பெறுவதற்கும் போலி ஆவணங்களை தயாரித்தமையை கண்டுபிடித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொதுமக்களை சந்தேகநபர்கள் ஏமாற்றி, போலி ஆவணங்களை பயன்படுத்தி திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்புச் செய்துள்ளனர்.

போலி தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் போன்ற பிற ஆவணங்களை தயாரிக்க அவர்கள் சமூக ஊடகங்களிலிருந்து தகவல் மற்றும் படங்களை பெற்றுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.