இனி ஆரம்ப பாடசாலையில் உறங்கினால் கட்டணம் செலுத்த வேண்டுமா! வெளிநாடொன்றில் வெளியாகியுள்ள வினோத அறிவிப்பு

சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் உள்ள தனியார் ஆரம்ப பாடசாலையில், மாணவர்கள் மதிய உணவிற்குப் பிறகு உறங்குவதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.

இது சம்மந்தமாக மாணவர்களின் பெற்றோர்களுக்கும் பாடசாலை சார்பாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அந்த தகவலில், குழந்தைகள் இனி அவர்களின் மதிய உணவினை எடுத்ததன் பின்னர் அவர்கள் உறங்க விரும்பினால் உறங்க முடியும் என்றும் அதற்கு பாடசாலைக்கு மேலதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாமல் அவர்கள் உறங்கும் முறைகளுக்கு ஏற்றவாறு கட்டணம் மாறுபடும் என்றும் அந்த முறைகளையும் வகைப்படுத்தியிருந்தனர்.

அதாவது குழந்தைகள் பள்ளி மேசையில் தலை வைத்து உறங்குவதற்கு ஒரு கட்டணமும்,வகுப்பறை தரையில் உறங்குவற்கு ஒரு கட்டணமும், மிகவும் வசதியாக கட்டிலில் உறங்கினால் அதற்கு வேறாக ஒரு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று பாடசாலை நிர்வாகம் கூறியிருந்தது.

இந்த தகவல் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு தீர்வளிக்கும் விதமாக பாடசாலை கூறியதாவது: பாடசாலையில் உறங்க விருப்பமில்லாத மாணவர்கள் வீட்டிற்கு சென்றும் உறங்க முடியும் என பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது

மாணவர்கள் உறங்கும் போது, அவர்களை ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் அதற்காகவே பணம் வசூலிப்பதாக பாடசாலை நிர்வாகம் தமது முடிவினை நியாயப்படுத்தியுள்ளது.  

அதுமாத்திரமல்லாமல், இதுகுறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.