ரணிலை ஆதரிக்காவிட்டால் மொட்டு கட்சி இரண்டாக பிளவடையும் என்கிறார் பிரசன்ன

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை எடுக்காவிட்டால் கட்சி இரண்டாக பிளவுபடும் என்று அக்கட்சி உறுப்பினரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க பக்கமே நான் நிற்கின்றேன். மொட்டு கட்சி தனி வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால்கூட ரணிலுக்கே நான் ஆதரவு வழங்குவேன். ஆனால் அவ்வாறானதொரு முடிவை கட்சி எடுத்தால் கட்சி பிளவுபடும். பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில் பக்கம் நிற்பார்கள்.

நாமல் ராஜபக்ச சிறந்த அரசியல்வாதி. சஜித், அநுரவைவிட சிறந்தவர். எனினும், மொட்டு கட்சியை மக்கள் நிராகரித்துள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் அவர் களமிறங்ககூடாது. நாமல் களமிறங்கினாலும் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். தேர்தலில் களமிறங்கும் நிலைப்பாட்டில் நாமலும் இல்லை.

ஜனாதிபதியின் பதவிகாலம் ஐந்தாண்டுகள்தான், ஆளுங்கட்சி நீதிமன்றத்தை நாடவில்லை. சிலவேளை அது எதிரணிகளின் சதியாகக்கூட இருக்கலாம்.” – என்றார்.

இதேநேரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு பொதுஜன பெரமுன தயாராக இருந்தால் அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த  மஹிந்த ராஜபக்ஷ,

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டம் இப்போது எங்களிடம் உள்ளது.

நாங்கள் வெற்றி பெறுகிறோம் என்பது நல்ல செய்தி. தேர்தலில் வேட்பாளரை களமிறக்கும் போது அவர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பது புரியும்.

நாங்கள் எப்போதும் ஒரு பொது வேட்பாளரையே முன்வைத்தோம். அடுத்து நமது அரசு வரும்.

அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் இணைந்து பயணிக்க தயாராக இருந்தால், நாங்கள் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.