போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் சகல கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது.மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் அரசியல் நிலைப்பாட்டுடன் போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர்,
அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு அமைய ஒருசில தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் கம்பஹா - பென்முல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
புகையிரத சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு பொது மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்குகிறார்
பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது.
பொது மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை எடுங்கள்.
இவர்களின் அரசியல் நிலைப்பாடுகளுக்காக அப்பாவி மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க முடியாது என்றார்