மிகவும் சூடு சுரணையுள்ள யாருக்கும் விலை போகாத தலைவரே பிரபாகரன்!



தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மிகவும் ஒரு சூடு சுரணை உள்ள தலைவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விலை போகின்ற ஒருவராக இருக்கவில்லை. 

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது, பிரபாகரன் அவர்கள் உயிருடன் உள்ளார் என்ற கருத்து தொடர்பாக வினவியதற்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடாந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“தலைவர், யுத்த களத்தில் தனது மூன்று தலைமுறைகளை இழந்து இருக்கின்றார். அவ்வாறான நிலையில், பழ நெடுமாறன் கூறியிருக்கும் கருத்தை எடுத்தவுடன் நாங்கள் தட்டி விட முடியாது. இருந்தாலும் இந்த கருத்தின் பின் அரசியல் இருக்கின்றதா அல்லது புலனாய்வு விடயங்கள் இருக்கின்றதா என்று சந்தேகம் எழுகின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 13 ஆம் திருத்தச் சட்ட நகலினை பௌத்த மத குருமார்கள் எரித்தார்கள். இந்த நிலையில் அதிபர் 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஏற்பாடுகளை முன்னெடுத்தால் நாடு முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கும் என்ற ஒரு கருத்தினை முன் வைத்திருக்கின்றார்கள்.

இது பழைய புராணம் அல்லது பழைய குருடி கதவை திறவடி என்று கூறுவார்கள். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தற்போது வரை மிக மோசமான சிங்கள பௌத்த அடிப்படைவாதம் இந்த நாட்டை சீர்குலைத்து இருக்கின்றது.

இன்று இந்த நாடு பொருளாதாரத்தில் அதள பாதாளத்திற்குள் சென்றிருக்கின்றது.  இதற்கு காரணம் இனவாதம், மதவாதம். தமிழ் மக்களினுடைய பிரச்சினை தீர்க்கப்படாத காரணத்தினால் தொடர்ந்தும் இந்த நாடு இந்த பிரச்சனைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால் நாட்டை காட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படும்.

பௌத்த சிங்கள அடிப்படை வாதத்தை அரசியல்வாதிகள் கையாண்டு கொண்டிருக்கின்றார்கள் பண்டா செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிவதற்கும், டட்லி செல்வா ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கும் கூட இவர்கள்தான் காரணமாக இருந்தார்கள்.

13 வது அரசியல் யாப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் தடையாக இவர்கள் தான் இருக்கின்றார்கள். உள்நாட்டுப் பொறுமுறையினால் அல்லது உள்நாட்டு அரசாங்கத்தினால் இனப்பிரச்சினியை தீர்க்கக் கூடிய வாய்ப்பு இலங்கையில் இல்லை சர்வதேச பொறிமுறை மூலமாக சர்வதேச மத்தியஸ்தம் மூலமாக இந்த நாட்டின் பிரச்சினை தீர்க்கப்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாக அதிபரின் நகர்வினை எவ்வாறு பார்க்கின்றீர்கள் என வினவிய போது, 

“எதுவும் உண்மையில்லை ஏமாற்றுகின்ற வித்தையாகவே காணப்படுகின்றது. அதிபர் கூறுகின்றார் பிரச்சினையை தீர்க்க போகின்றோம் என்று அடுத்த கட்டமாக பிக்குகள் ஏவி விடப்பட்டவர்கள் போன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே 13ஆம் திருத்த சட்டத்தை கொளுத்தி விடுகின்றார்கள்.

இந்த நாட்டில் பௌத்தகுருமார்களுக்கு எதிராக சட்டம் பாய்வதில்லை எதை செய்தாலும் கௌரவமான அந்தஸ்துள்ள தலைவர்களாக மதிக்கப்படுகின்றார்கள் எனவே அந்த குழப்பகாரர்கள் இருக்கும் வரைக்கும் இந்த நாட்டில் சாந்தியோ சமாதானமோ அல்லது சர்வ மாதங்கள் ஒன்றாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகாது.

ரணில் அடுத்த முறையும் தான் அதிபராக வரவேண்டும் என்பதற்காக பொய்யான வார்த்தைகளை கூறிக் கொண்டிருக்கின்றார். ஆனால் அவற்றை தீர்ப்பதற்கான ஆளுமை சக்தி அவரிடம் இல்லை.

“மேலும் மரத்தால் விழுந்தவனை மாடு முட்டுவது போல் மக்களிடம் வருமானம் வற்றிப் போய் கிடக்கின்றது. வருமானம் இல்லாத நிலையில் வரிகள் அதிகரித்து கொண்டிருக்கின்றன.

அரசியல் அறிவில்லாமல் பொருளியல் அறிவில்லாமல் கோட்டாபய ராஜபக்சவால் செல்வந்தர்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை விலக்கிவிட்டதன் காரணமாக அரசுக்கு 60,000 கோடி நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது.

சீனி இறக்குமதியில் தங்களுடைய நண்பர்களுக்கு சலுகைகள் கொடுத்ததனால் 1600 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது. இவ்வாறு வெங்காயம், சீனி, எண்ணெய் எல்லா இறக்குமதிகளிலும் தரகு பணம் அடிக்கின்ற செயற்பாடு அரசு செய்வதனால் முழு கடன் சுமையும் மக்களின் தலையில் பாய்ச்சப்படுகின்றது.

இதனால் மின்சார சபைக்குரிய வரிகளை அதிகரிப்பதன் மூலமாக மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கி மிக மோசமான போராட்டத்தில் ஈடுபடுவதற்குரிய வாய்ப்பை அளிக்கின்றார்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த முறையைப் பார்க்கிலும் இந்த முறை அதிகளவான மக்கள் தமிழரசு கட்சிக்கு வாக்களிப்பதற்கு ஆயத்தமாக உள்ளனர். அரசாங்கத்தை பொறுத்தவரையில் தேர்தலை வைப்பதற்கான மனநிலை அவர்களிடத்தில் இல்லை.

மொட்டுக் கட்சி மற்றும் யானை கட்சியினை எடுத்துக் கொண்டால் இந்த தேர்தலில் படுதோல்வியை அடைவார்கள் என்ற காரணத்தினால் இந்த தேர்தலை தள்ளி வைப்பதற்கு பார்க்கின்றார்கள்.

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் மக்களின் கருத்துக்களை பெறுவதற்காகவும் மக்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக இருக்கின்றார்கள். சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடுகிறார்கள். நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் இருக்கின்றார். தேர்தலை அரசாங்கம் தள்ளிப் போடுகின்ற போது அரசாங்கத்தின் செல்வாக்கு குறையுமே தவிர கூடாது எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.