மண் மாபியாக்கு பின்னால் உள்ள அரசியல்...

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் கனிம வள அகழ்வு ஒரு பேசு பொருளாகவே இருந்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் மட்டக்களப்பில் இருந்து மணல், கிரவல், கல் போன்றவை வெளி மாவட்டத்திற்கும் வெளிநாடுகளுக்கும் லொறிகள் மூலமாகவும் தொடருந்துகள் மூலமாகவும் ஏற்றப்பட்டு இருந்தது.

இந்த மணல் தொடர்பாக பல ஆண்டுகளாக பல பிரச்சினைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுந்த வண்ணமே உள்ளது.

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு செய்யும் இடங்களில் பாதுகாப்பு படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்று இருந்தன.

பண முதலைகள் அப்பாவி ஏழைகளை பகடைக்காய்களாக பாவித்து தாங்கள் சுயலாபம் அடைந்த வரலாறே கடந்த காலங்களில் இருந்து வருகின்றது.

பின் தங்கிய பிரதேசங்களில் மணல் அகழ்வு காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அந்தக் கிராமமே மூழ்கும் நிலை தான் இன்றும் காணப்படுகின்றது.

ஆனால், இந்த மண்மாபியாக்கள் என்பவர்கள் அரசாங்கத்தின் அனுசரணையுடன் அடிமட்ட கிராம மக்களின் அனுமதி இல்லாமல் அதிகளவான மணல்களை சூறையாடுகின்ற நடவடிக்கையின் காரணமாக தான் தற்போது எதிர்ப்புகள் அதிகரித்து இருக்கின்றது.

வாகனங்களை குத்தகை அடிப்படையில் எடுத்து தங்களது வாகனங்களுக்கு மாதாந்த பணம் கட்ட முடியாதென மண் மாபியாக்கள் ஒரு புறம் அவர்கள் ஒரு பிரச்சினையை தெரிவிக்கின்ற போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்வளத்தை அழிக்கின்ற நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

உண்மையில் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இடங்களில் மணல் அகழ்வு மேற்கொள்வது ஒரு பாரிய சவாலாகவே இருக்கின்றது.

அதற்கு நல்லதொரு உதாரணம் நேற்றைய சம்பவம். பலர் பெரும்பான்மை இனத்தவர்களின் பினாமிகளாக செயல்படுவதோடு சமூகத்தில் தாங்கள் நல்லவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் இதற்குப் பின்னால் இருந்து கொண்டு மட்டக்களப்பு மண்ணை விற்று வயிறு வளர்ப்பதற்கு விரும்புகின்றனர்.

எது எவ்வாறாக இருந்தாலும் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் நலன்களுக்கு கனிம வளங்கள் தேவை அவற்றை உரிய அனுமதியுடன் உரிய இடங்களில் அகழ்வதனால் எவ்வித பிரச்சினையும் வரப்போவதில்லை.

ஆனால் அதற்கு மாறாக வயல்களையும் ஓடைகளையும் மக்கள் குடியிருப்புகளையும் குறிவைத்து நடத்தும் இந்த கனிம வள அகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது.

நேற்றைய சம்பவத்தின் பின்னதாக பல புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இதன் பின்னால் இருப்பவர்கள் யார், இவர்கள் சண்டித்தனமாக பேசுவதும் எதிர்ப்பவர்களை அச்சுறுத்துவதும், ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதும் வேதனை தரும் விடயமாக பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான கனிம வள அகழ்வு தொடர்பாக கடந்த காலங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டு துரத்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

மட்டக்களப்பிற்குள் உள்ள கனிம வளம் தொடர்பாக உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு கூட ஊடகங்களுக்கே முடியாத நிலை என்றால் இந்த மண் மாபியாக்கள் யார்?