கண்ணீர்புகை வாகனம் மற்றும் பொல்லுகளுடன் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! காலிமுகத்திடல் பகுதியில் பதற்றம்

காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த நிலையில் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்களுடன் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டு வந்த மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், எங்களை சுடுவதற்காகவா இங்கு வந்தீர்கள், முடியுமானால் எங்களை சுட்டுத்தள்ளுங்கள் என தமது பலத்த எதிர்ப்பினை காட்டி பொலிஸாரை அங்கிருந்து அனுப்பும் முயற்சியில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அத்துடன் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும் பொலிஸார் பலர் பாதுகாப்பு கடமைக்காக வந்துள்ளதுடன், தற்போது போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

23 நாட்களாக ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலானது போராட்டக்காரர்களின் முற்றுகைக்குள் இருக்கின்றது.

இந்த நிலையில் பொலிஸாரின் இந்த திடீர் செயற்பாடுகள் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் மத்தியில் குழப்ப நிலையையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயில் பகுதியில் போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டுள்ள மேடையை அகற்றுமாறே பொலிஸார் போராட்டக்காரர்களிடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது. 

இதேவேளை பொலிஸார் அங்கு பொல்லுகள், தடிகளுடன் களமிறங்கியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்ததுடன், கண்ணீர்ப்புகை வாகனம் மற்றும் ஒரு தரப்பு பொலிஸார் போராட்டக்காரர்களின் எதிர்ப்பினால் அங்கிருந்து சென்றுள்ள நிலையில், மற்றுமொரு தொகுதியினர் அப்பகுதியிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலிமுகத்திடலில் 23ஆவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.