திருமண நிகழ்வில் பிரதமர் அலுவலகத்தின் கார் : சாரதிக்கு 15 வருட சிறைத் தண்டனை

பழுது பார்ப்பதற்காக வழங்கப்பட்டிருந்த பிரதமர் அலுவலகத்தின் சொகுசு காரை திருமண நிகழ்விற்கு பயன்படுத்தியவருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கார் பழுது பார்க்கும் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியின் கோரிக்கைக்கமைய, திருமண நிகழ்விற்காக குறித்த கார் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் காரை கொண்டுச் சென்ற சாரதிக்கு 2 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 15 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சத்து 50000 ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, சிறைத்தண்டனை நிறைவேற்றப்பட்டால், அது பிள்ளைகளின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதனால் ஒத்தி வைக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தை ஒப்படைத்த வாகன பழுதுபார்க்கும் நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் இந்த வழக்கில் முதலாவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் 31ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

பிரதமர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட வாகனத்தை இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவது மிகவும் பாரதூரமான குற்றமாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

அப்படி ஒரு வாகனத்தை எடுத்து கொலை அல்லது வேறு ஏதேனும் குற்றத்திற்காக பயன்படுத்த சாத்தியம் இருப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.