வடக்கு கிழக்கை தனி இராஜ்ஜியமாக்கும் திட்டம் - இராஜதந்திர நகர்வில் ஜூலி சங்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனி இராஜ்ஜியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே அமெரிக்காவின் நோக்கம் என ராஜபக்ச விசுவாசியும் கமியூனிஸ்ட்வாதியுமான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் நாட்டில் போராட்டங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கே ஈடுபட்டுள்ளார் எனவும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். 

அத்துடன் காலிமுகத்திடல் போராட்டத்திற்கும் இவரே ஒத்துழைப்பு வழங்கியதாகவும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்சவை ஜுலி சங்கே பதவியிலிருந்து விரட்டியதாகவும் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நேற்றைய தினம் இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் ஜூலி சங் தலையிடுகின்றார். அவ்வாறு தலையிடுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதி முக்கியமானது அல்ல. சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை முன்வைக்கும். அந்த நிபந்தனைகளே இன்று நடைமுறைப்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

தேசிய கடனை மறுசீரமைக்கும் வியடத்திற்குள்ளும் நிபந்தனை விதிக்கும் பல காரணங்கள் உள்ளன. அந்த நிபந்தனைகள் மிகவும் மோசமானது என கூறப்படுகின்றது.

வேதனை அளிக்கும் எனவும் கூறப்படுகின்றது. அதேபோன்று அந்த நிபந்தனைகள் மக்களின் எதிர்ப்பிற்கு உள்ளாகும் எனவும் கூறப்படுகின்றது.

அவ்வாறெனின் மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு வேதனை அளிக்கும் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தினால், பாரிய மக்கள் எதிர்ப்பை மாத்திரமே அரசாங்கம் எதிர்பார்க்க வேண்டும்.

அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இருக்கின்றார். இன்று அவர் கோர்பச்சோப் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கோர்பச்சோப் சிறந்த ஒருவர். அவர் கமியூனிஸ்ட் சித்தார்ந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

ரஷ்யாவை உடைத்தார். தாராளவாதத்தை அறிமுகப்படுத்தினார். இலங்கைக்கும் கோர்பச்சோப் போன்ற ஒருவர் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஜுலி சங், இலங்கையின் நிர்வாகம் குறித்து ஏன் அவர் தலையீடு செய்கின்றார்.

வடக்கு கிழக்கு பகுதிக்கு தனியான அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் இலங்கையில் கோர்பச்சோப் போன்ற ஒருவர் தேவை என கூறுகின்றார்.

வடக்கு கிழக்கிற்கு தனியான அரசாங்கம் ஒன்றை பெற்றுக்கொடுப்பது அவரின் பிரதான நோக்கமாக மாறியுள்ளது. இலங்கையின் உள்ளக ஆட்சி குறித்து அவருக்கு உரிமை உள்ளதா? இல்லை. இது அமெரிக்காவின் பலவந்தமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.