ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டம்! உண்மைத் தன்மை குறித்து பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு


புதிய இணைப்பு

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் தனியார் வானொலி அலைவரிசை ஊடாக இன்று (28.02.2023) காலை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவ்வாறான செய்திகள் எதுவும் பதிவாகவில்லை எனவும், அவ்வாறான விசாரணைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது தொடர்பான செய்திகள் குறித்து பொலிஸார் தனித்தனியாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


முதலாம் இணைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் படுகொலை செய்வதற்கான முயற்சியொன்று குறித்து சீ.ஐ.டி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை படுகொலை செய்வது தொடர்பில் அரசியல் கட்சியொன்றின் முக்கியஸ்தர்கள் அண்மையில் வெளிநாடொன்றில் வைத்து கலந்துரையாடியுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியைப் படுகொலை செய்வதற்கான முயற்சிகள் குறித்து அவர்கள் கலந்துரையாடியுள்ளதாக பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் குறித்த அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பிலும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.