யாழ்.சர்வதேச விமான நிலைய செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க அனுமதி!

யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020 மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டிருந்தன.இந்த நிலையில் குறித்த விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரை வாடகை விமானத் தொழிற்பாடுகள் மற்றும் நேர அட்டவணைக்கமைவான விமானப் பயணங்களை மேற்கொள்வதற்காக சர்வதேச ரீதியாகவும் உள்ளூரிலும் நிறுவப்பட்டுள்ள விமான நிறுவனங்கள் தற்போது வேண்டுகோள்களைச் சமர்ப்பித்துள்ளன.

இதற்கமைய யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பித்தல் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.