இலங்கையின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடையோருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, விசேட தேவையுடையோர் வாக்களிக்கும் போது வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்காக உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்து குறித்த விடயத்தை அறிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உடன் அழைத்து செல்லும் உதவியாளர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் வேட்பாளர் ஒருவரின் முகவராகவோ அல்லது வாக்களிப்பு நிலையத்தின் முகவராகவோ இருக்கக் கூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, விசேட தேவையுடையோர் வாக்களிப்பதற்காக உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்லும் போது உரிய தகுதிச் சான்றிதழை வாக்களிப்பு நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு நடந்து அல்லது பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியோ வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல முடியாத விசேட தேவையுடைய வாக்காளர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும், கிராம அலுவலர் அலுவலகங்களிலும், www.election.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் உரிய தெரிவத்தாட்சி அலுவரிடம் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பவர், தன்னால் கால்நடையாகவோ அல்லது பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியோ வாக்களிப்பு நிலையத்திற்குச் செல் முடியாது என நிரூபிக்கக்கூடியவாறு வைத்தியரின் சான்றிதழுடன் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்கழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            