சிறீதரன் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபம்! இவர் இருக்கும் வரை விடுதலை இல்லை என்கிறார் நீதி அமைச்சர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச விமர்சித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது, சிவஞானம் சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, தமிழ் சமூகத்தை வழிநடத்தக்கூடிய தலைவர்கள் கடந்த காலங்களில் இருந்தார்கள். அதிபராக பிரதமராக பதவியேற்க தகுதியான தமிழர்கள் இருந்தார்கள். அவர்களை யார் கொலை செய்தது என்பது எமக்கு தெரியும்.

நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களை பிரிதிநிதித்துவப்படுத்தக்கூடிய சிறந்த மற்றும் அறிவுள்ள தரப்பினரை பிரபாகரன் கொலை செய்தார்.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ஆனந்த சங்கரியின் வெள்ளவத்தையில் உள்ள வீட்டின் மீது புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். இதன் போது, அவர் பாதுகாப்பு தேடி என்னிடம் வந்தார்.

இதையடுத்து, முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. எனினும், அவரது மகனான கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி, தற்போதும் விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து சில புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் நடைமுறை காரணமாக நீங்கள் தற்போது பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள். சிறந்த கல்வி அறிவையுடைய தலைவர்களை பிரபாகரன் கொலை செய்த காரணத்தால் தான் நீங்கள் இன்று நாடாளுமன்றத்தில் இருக்கிறீர்கள்.

குறித்த தரப்பினர் உயிருடன் இருந்திருந்தால் இன்று உங்களுக்கு நாடாளுமன்றத்துக்குள் வர வாய்ப்பு கிடைத்திருக்காது.

உங்களை போன்ற தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும் வரை, தமிழ் மக்களுக்கு விடுதலை இல்லை. நீங்கள் தான் தமிழ் மக்களுக்கு சாபம் எனக் குறிப்பிட்டுள்ளார்.