பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி, தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டுகிறது.
அதன்படி, மேற்கண்ட முடிவு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு மாறாகச் செயல்பட்டால், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
போதுமான எரிபொருள் இருப்பு இருந்தபோதிலும், நுகர்வோர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி இவ்வாறு செயல்படுவதால், பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை ஈரான் - இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் நேற்றுமாலை அம்பாறையில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடித்திருந்தமையை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை ,பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு ,சம்மாந்துறை ,நிந்தவூர், அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று , உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்ந்துள்ளது.
இதையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு குறித்து போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே மட்டக்களப்பு நகரில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெற்றுக்கொன்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் எரி பொருள் தட்டுப்பாடு இல்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் அதிகமாக காணப்படுவது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினாவிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்