யாழில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு தண்டப்பணம்!

யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு 185000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் கடந்த 20ம் மற்றும் 21ம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 10 வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டன.

அதேவேளை நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு வர்த்தக நிலையத்தில் இருந்து காலாவதியான பொருள் மீட்கப்பட்டன.குறித்த இரு பொது சுகாதார பரிசோதகர்களினாலும் தமது பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது காலாவதியான பொருட்களை கடைகளில் வைத்திருந்த உரிமையாளர்களுக்கு எதிராக நேற்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணையின் போது 11 கடை உரிமையாளர்களும் தமது குற்றத்தினை ஏற்றுக்கொண்டதை அடுத்து, மன்றினால் உரிமையாளர்களுக்கு மொத்தமாக 185000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.