கடனுக்காக இளம் வயது சிறுமிகளை விற்கும் பெற்றோர்..! கூட்டு வன்புணர்வுக்கு இரையாகும் கொடூரம்

வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் பெற்றோரால் திருப்பிச் செலுத்த முடியாத கடனுக்காக தங்கள் இளம் வயது சிறுமிகள் விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளதுடன், தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மாகாண நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளது.

30 நாட்களுக்குள் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், குடும்ப உறுப்பினர் ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்போது சக கிராம மக்களிடம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

ராஜஸ்தான் மாகாணத்தின் பில்வாரா பகுதியை சுற்றியுள்ள மாவட்டங்களில், இவ்வாறாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத குடும்பம் தொடர்பில், கடன் அளித்தவர் தங்கள் சாதி பஞ்சாயத்துகளில் புகார் அளிக்கின்றார்.

இதுபோன்ற சூழலில் பணத்திற்கு பதிலாக, கடன் வாங்கிய குடும்பத்தினர் தங்கள் இளம் வயது பெண் பிள்ளைகளை ஒப்படைக்கும் நிலை ஏற்படுகிறது.

சில வேளை தொகைக்கு ஏற்ப, ஒன்றிற்கும் அதிகமான பிள்ளைகளையும் ஒப்படைக்கும் நெருக்கடி ஏற்படுவதுண்டு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்படியாக பெண் பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் நபர், அவர்களை விற்று தமக்கான தொகையை ஈட்டுகிறார்.

பெண் பிள்ளைகளை கையளிக்க மறுக்கும் தாய்மார்கள் கூட்டு வன்புணர்வுக்கு இரையாகும் கொடூரமும் நடந்தேறுவதாக மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுமார் 1.5 மில்லியன் இந்திய ரூபாய் கடனாக வாங்கிய ஒருவர், தொகையை திருப்பிச் செலுத்த முடியாமல் போகவே, கடனை அடைப்பதற்காக தனது சகோதரியையும் 12 வயது மகளையும் விற்க பஞ்சாயத்து வற்புறுத்தியுள்ளது.

மனைவியின் சிகிச்சைக்காக 600,000 ரூபாய் கடனாக வாங்கிய ஒருவர், தமது இளம் வயது மகளை ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த இளம் பெண் ஆக்ரா பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்கப்பட்டு, அங்கிருந்து மூவருக்கு கைமாறப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, நான்குமுறை குறித்த பெண் கருவுற்றதாகவும் மனித உரிமைகள் ஆனையம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் சாதி பஞ்சாயத்துகள் தான் கிராமங்களை கட்டுப்படுத்துவதால், இதுபோன்ற விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் அல்லது மாகாண நிர்வாகத்தால் தலையிட முடியாத சூழல் என பெண்கள் உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.