இந்தியாவில் அறிமுகமாகும் புதிய கிரிக்கெட் தொடர்! சென்னை அணியை வாங்கிய நடிகர் சூர்யா



இந்திய திரைப்பட நடிகர் சூர்யா, சென்னையை மையமாகக் கொண்ட புதிய கிரிக்கெட் அணி ஒன்றை விலைக்கு வாங்கியிருப்பதாகத் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. தற்போது கிரிக்கெட் விளையாட்டு வியாபாரமாகவும் மாறியுள்ளது.

இந்தியன் ப்ரீமியர் லீக்கின் மினி ஏலம் அண்மையில் நடந்த போது வீரர்களை கோடிக்கணக்கில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவில் T10 கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தும் நோக்கில் ISPL T10 என்ற தொடரை CCS Sports LLP எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ISPL என்றால் Indian Street Premier League என கூறப்பட்டுள்ளது. உள்ளூர்களில் உள்ள திறமையான வீரர்களை வைத்து இந்த தொடர் நடாத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தொடரின் ஆலோசகராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதி வரை மொத்தம் 19 போட்டிகள் இத் தொடரில் நடைபெறவுள்ளது.

வழக்கமான கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் இந்தத் தொடரில் டென்னிஸ் பந்து மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஸ்ரீநகர் என 6 அணிகள் பங்கேற்கின்றன.

மும்பை அணியை அமிதாப் பச்சனும், ஹைதராபாத் அணியை ராம் சரணும், ஸ்ரீநகர் அணியை அக்சய் குமாரும், பெங்களூர் அணியை ஹிரித்திக் ரோஷனும் ,வாங்கியிருக்கும் நிலையில் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.

இதனை அவரே தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

சூர்யா நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருவதோடு அகரம் அறக்கட்டளை மூலம் மாணவர்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில் அவர் கிரிக்கெட்டிலும் தடம் பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.