எப்போதும் எமது ஆதரவு பாலஸ்தீனத்துக்கே உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கிடையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் போர் நடவடிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நாம் பாலஸ்தீனம் பக்கம்தான் அன்று நின்றோம். இன்றும் நின்கின்றோம். எதிர்காலத்திலும் நிற்போம் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை இஸ்ரேலில் இடம்பெற்று வரும் போர் காரணமாக காணாமல் போன தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு இலங்கையிலுள்ள மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் உரிய அதிகாரிகளிடம் தகவல் வழங்குமாறு காணாமல் போனவரின் மனைவி ஜயனா மதுவந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
வென்னப்புவ பிரதேசத்தில் வசிக்கும் சுஜித் நிஷங்க பண்டார யாதவர என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சுஜித் பண்டார யாதவர இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவருக்கு 13 வயது மகளும் 8 வயது மகனும் உள்ளனர்.
தனது கல்வியை முடித்துவிட்டு, பல தொழில்களை செய்தவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு டுபாயில் பணியாற்ற சென்றுள்ளார்.
இந்நிலையில் தனது கணவன் தொடர்பில் தகவல் வெளியிட்ட ஜயனா மதுவந்தி,
வென்னப்புவ பிரதேசத்தில் சொந்த வீடு ஒன்றை வாங்கினோம். இன்னும் சொந்த வீட்டுக்கு கணவர் வரவில்லை. சம்பவத்தன்று அவர் எனக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டார்.
சிறிது நேரத்தில் தாக்குதல் சத்தம் கேட்டது. அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டதாக கூறினார். அதன்பின், பல நொடிகள் கடக்கவில்லை அவரது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. என்ன நடந்தது என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
தொலைக்காட்சியில் பார்த்த பிறகுதான் போரின் தீவிரம் தெரிந்தது. அவர் என்னை சந்திப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என் கணவர் வருவார் என்று காத்திருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.