13 நாட்களாக காத்திருக்கும் எண்ணெய் கப்பல்..! அதிர்ச்சியடைய வைக்கும் ஒரு நாளைக்கான தாமத கட்டணம்

கடந்த 23ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்கு வந்த கச்சா எண்ணெய் கப்பலொன்று 13 நாட்களாக கடலில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,தாமதக் கட்டணமாக நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் எரிபொருள், மின்சாரம் மற்றும் நீர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித இது தொடர்பாக கூறுகையில், இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை இலங்கைக்கு வந்து தாமதமாக செலுத்த வேண்டிய கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து இருபதாயிரம் டொலர்கள் செலுத்தப்பட்டதாகவும் ஆனால் இந்த கப்பல் 23 ஆம் திகதி வந்த நிலையில் அதற்கு தாமதக் கட்டணமாக நாளொன்றுக்கு தலா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் டொலர்கள் செலுத்த வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு நாள் ஒன்றுக்கு இருபத்தைந்தாயிரம் டொலர்கள் தாமதக் கட்டணமாகச் செலுத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது தினசரி தாமதக் கட்டணம் அதிகரித்துள்ளமை குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.