உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குள் இந்தியா நுழைவது உறுதி - காரணம் இதுதான்..!

 ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகள் இந்த வருடம் நடைபெறவுள்ளது.

இதற்கான தயார்படுத்தலில் ஒவ்வொரு அணியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

எந்த அணிகள் அரையிறுதிக்குள் நுழையும், எந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும் என பல கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது எதிர்வுகூறல்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் விரேந்தர் சேவாக் ஒருநாள் உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு நுழையும் இரு அணிகளை கூறியுள்ளார்.

"இந்தியாவில் நடைபெறும் போட்டியில் ஆசிய அணிகள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறமுடியாது.

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா வீரர்கள் அதிக எண்ணிக்கையில் விளையாடுகிறார்கள்.

எனவே அவர்களும் இங்கு சிறப்பாக விளையாட வாய்ப்பு உள்ளது.

இந்திய வீரர்களுக்கு சொந்த மைதானம் என்பதால் அவர்களுக்கு மைதானங்களை பற்றி நன்றாக தெரிந்து இருக்கும்.

ஆகவே இந்திய வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன்.

இந்திய அணி உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசையாக உள்ளது.

தற்போது இந்திய அணியில் சிறப்பாக விளையாடக்கூடியவராக விராட் கோலி இருக்கிறார்.

அவருக்காக இந்தியா இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன்.

அவர் எப்போதும் 100 சதவீதத்துக்கு மேலான பங்களிப்பை அணிக்கு வழங்கக்கூடியவர்.

அவரும் உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவதற்கு மிகுந்த ஆவலுடன் இருப்பார்.

அவர் நிச்சயம் அதிக ஓட்டங்களை குவிப்பார் என்று நம்புகிறேன்.

இந்தியா உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு தனது மிகச்சிறந்த ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்துவார். 

எல்லோரையும் போல நானும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை காண ஆவலாக உள்ளேன்.

இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை சொல்வது கடினம்.

ஆனால் நெருக்கடியை திறம்பட கையாளும் அணி வெற்றியை தன்வசப்படுத்தும்.

இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதே எனது கணிப்பு.

இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதக்கூடும்." எனக் கூறியுள்ளார்.