இலங்கைக் கடற்பரப்பில் பிடிக்கப்படாத மீன் இனங்களை மாத்திரமே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (24) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.
சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி தொடர்பாக கூறப்படும் தகவலில் உண்மைநிலை இருப்பதாக தெரியவில்லை என குறிப்பிட்ட அமைச்சர், இராஜாங்க அமைச்சுக்கு தான் இலங்கை கடற்தொழில் கூட்டுதாபனத்தை கண்காணிக்கின்ற மற்றும் செயற்படுத்துகின்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் நேர்மையாகவும், நியாயமாகவும், சட்ட பூர்வமாகவும் செயற்படுபவர் என்றும் அவர் கூறினார்.
இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கையில் மிக குறுகிய காலத்தில் பிடிக்கப்படுகின்ற அல்லது பிடிபடாத மீன்களை தான் இறக்குமதி செய்யலாம் என கூறியிருக்கின்றேன்.
நியாயமான விலையில், தரமானதாக, திணைக்களத்தின் சட்ட திட்டங்கள் உட்பட்டவையாக இருக்க வேண்டும், இவ்வாறான மீன்களையே இறக்குமதி செய்ய முடியும் எனவும் கூறியிருக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.
அந்தவகையில், தான் மீன்கள் இறக்குமதி செய்யப்படுகிறது, அதில் முறைகேடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை, அவ்வாறு இருக்குமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இன்று நாடு இருக்கின்ற நிலை, உலகத்தினுடைய போக்கு மற்றும் யுத்தங்கள் சூழ்ந்திருக்கின்ற சூழலில் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாத விடயம் என்று மின்சார கட்டண அதிகரிப்பு குறித்து வினவப்பட்ட பொது தெரிவித்திருந்தார்.
அதிலிருந்து நாங்கள் மீள வேண்டும் என்பதற்காகத் தான் இயற்கை மின்சார உற்பத்திக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
காற்றாடி, சூரிய ஒளி இவ்வாறாக இயற்கை வளங்களை பயன்படுத்தும் மின்னுற்பத்தி திட்டங்களை விரைவாக நிறைவேற்றினால் மின்விலையேற்றம் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் என்பவற்றிலிருந்து மக்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சுகாதார அமைச்சரை பதவி மாற்றியமை குறித்து வினவப்பட்ட, பதவியில் மாற்றங்கள் ஏற்படுவதென்பது சூழலுக்கு ஏற்ப நடந்திருக்கிறது என்றும் அதில் எந்தவித உள்நோக்கங்களும் இல்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
பின்னர்,முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் திணைக்களத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            