வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது வவுனியா தரணிக்குளத்தில் 2ஆம் நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த போராட்டமானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும், அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க, வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கபட வேண்டும் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.
இதன் போது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஊடகங்களுக்கு வாசித்து காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            