வெளிநாடு செல்லும் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு - நடைமுறைக்கு வரவுள்ள சட்டமூலம்


ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் பிரச்சினைக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக பல சிறுவர்கள் பல்வேறு வன்புணர்வுகளுக்கு உள்ளாவதாகவும் ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“நாடாளுமன்றத்தில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று உள்ளது. அதில் 2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் குறித்த தாய்மார் வெளிநாடு செல்லலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குழந்தைகளுக்கு எதிரான பாரிய குற்றமாகும். இந்நிலையில் 5 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்களை மட்டும் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு அதிபருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் வன்புணர்வுக்கு ஆளானார்கள் என்று கூற வெட்கப்படுகிறோம்.

குடும்ப உறுப்பினர்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். சில நேரங்களில் தந்தையாலும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் தாய்மார்களை பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை அரசாங்கம் என்ற வகையில் உடனடியாக நிறுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்