கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை..! ஆரம்பிக்கப்பட்ட விசேட கருமபீடம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முகமாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

நேற்று (23) முதல் இந்த விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இருந்து தமது வெளிநாட்டு தொழில்வாய்ப்பு தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரர்கள் அதற்கான தமது ஆரம்பச் செயற்பாடுகளை நிறைவுசெய்த பின்னர், இந்த விசேட கருமபீடத்தில் ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தமது கடவுச்சீட்டை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த விசேட விசேட கருமபீடத்தை திறப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அங்கீகாரம் வழங்கியிருந்தார்.

அதிக கிராக்கி காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில் நியமனம் செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் தொழில் நிமித்தம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விசேட கருமபீடம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.