கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் முழுமையாக செயலிழந்துள்ளதென படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும், படங்களை பிடிப்பதற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லுமாறு படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பொதுமக்கள் அதிகமாக வருவதால் ஏற்படும் நெரிசல் நிலையைக் குறைப்பதற்காக, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த மென்பொருளானது, சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி, நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலிருந்தும் வெளிநாடு செல்ல எதிர்பார்ப்போர், தமது பிரதேசத்தில் உள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட படப்பிடிப்பு நிலையங்களில் படத்தைப் பிடித்து, இணையத்தள முறைமையில் பத்தரமுல்லையில் உள்ள தலைமையகத்திற்கு அதனை அனுப்பும் முறைமை உள்ளது.
இந்த நிலையில், படங்களை அனுப்புவதற்கான மென்பொருள் முழுமையாக செயலிழந்துள்ளதாக படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            