பிரபாகரனின் புதிய புகைப்படங்கள்..! போராளிகள் 30 குழுக்களாக - வெளியான பரபரப்பு தகவல்

2009இற்கு பின் வெளியேறிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் 30 குழுக்களாக இயங்குகின்றனர். உலக அளவில் பெரிய அரசியல் இயக்கத்தை பிரபாகரன் முன்னெடுப்பார் என தான் கருதுவதாக ஈழ கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புதிய புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும் என பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார் என உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்றுமுன் தினம் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.

பழ.நெடுமாறன் தெரிவித்த இந்தக் கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புதிய புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளிவரும் என காசி ஆனந்தன் மீண்டும் தகவல் வெளியிட்டுள்ளார்.

விசேட செவ்வியில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “பழ.நெடுமாறன் பொய் சொல்வார் என யாரும் கருதக்கூடாது. பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருக்கிறார்கள். இறுதிக் கட்டப் போரில் தப்பியவர்களும் உயிருடன் உள்ளனர். ஆனால் அவரின் இரண்டு மகன்களும் உயிருடன் இல்லை.

ஒவ்வொரு குழுவின் தலைவரும் தங்களை தலைவராகவும், பிரபாகரனாகவும் கருதுகின்றனர். அவரின் நினைவு நாளை இதுவரை யாரும் அனுசரித்தது இல்லை.

அவரும் இறுதிக் கட்டப் போரில் தப்பியவர்களும் உயிருடன் உள்ளனர். பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்தில் வைகோ போன்ற தமிழக தலைவர்கள் பெரிதாக முரண்படவில்லை.

அவர் மறைந்து வாழ மாட்டார் என கூறுவது பொருத்தமான கருத்து அல்ல. ரஷ்ய போராளி லெனினும் மறைந்திருந்து போராடியவர் தான்.

கடந்த 45 ஆண்டுகளாக ஏதிலியாக என்னை தாங்குவதால் இந்திய அரசை நான் மதிக்கிறேன். ஈழ மக்களுக்கு இந்திய அரசால் மட்டுமே உதவ முடியும் என்பதால் நான் மதிக்கிறேன்.

பிரபாகரன் இருந்த காலத்தில் சீனாவினால் இலங்கையில் கால்பதிக்க முடியவில்லை” - எனக் கூறியுள்ளார்.