புதிய கூட்டணி தொடர்பில் விளக்கமளித்துள்ள மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்கப்படும் புதிய கூட்டணி தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தருக்கு (Afreen Akhter) அந்த கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விளக்கியுள்ளார்.

அதேநேரம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இருதரப்பினருக்கிடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் வெளிநாடுகளுக்கான பயணங்கனை தீவிரப்படுத்தியுள்ளன.

இதற்கமைய, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் இந்தியாவுக்கான அரசியல் பயணத்தை மேற்கொண்டிருந்தது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட குழுவினரும் இந்தியாவுக்கு அரசியல் பயணத்தை மேற்கொள்வது தொடர்பான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் முதல் சந்திப்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தரை நேற்று சந்தித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கையின் அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க அரசாங்கத்தின் பல முக்கிய தரப்பினரை சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் சந்தித்து அரசியல் சார் பேச்சுக்களை முன்னெடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.