பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் நிறைவேற்று குழுகூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் கட்சியின் யாப்பை திருத்தம் செய்ததன் பின்னர், நிறைவேற்றுக்குழுவுக்கு புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
அத்துடன், இந்த கூட்டணியில் பலர் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அரசியலமைப்பானது திருத்தம் செய்யப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் பொதுஜன ஐக்கிய பெரமுன புதிய நிர்வாகிகள் சபையை நியமிக்கும் என நம்புகிறோம்.
இதற்கமைய மகிந்த அமரவீரவும் திலங்க சுமதிபாலவும் எமது கட்சியில் இணைய தீர்மானித்துள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் புதிய கூட்டணியின் தலைமைப்பதவியை சந்திரிக்காவுக்கு வழங்குவதற்கான பேச்சுகளும் இடம்பெற்றுவருகின்றன என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் 2018 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மனு தொடர்பான அடிப்படை சமர்ப்பணங்களை பரிசீலித்த எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன் பின்னர், குறித்த மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்ததுடன், சமூக செயற்பாட்டாளர் ஒஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.