ரணில் நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் வெளியான தகவல்

புதிய ஜனநாயக முன்னணியின்(NDF) தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) நியமிப்பது தொடர்பில் உள்ளக பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஜனநாயக முன்னணி சார்பில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில், தெரிவுசெய்யப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இரண்டு தேசிய பட்டியல் உறுப்பினர்கள் உட்பட மொத்தமான 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

அதன்படி, கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட உள்ளதுடன் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் புதிய ஜனநாயக முன்னணி பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தேசிய பட்டியலிலிருந்து நியமிப்பது தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.