இலங்கைக்கு எப்போதும் முதலிடம் : ரணிலிடம் நேரடியாக கூறிய நரேந்திர மோடி


அனைத்து துறைசார் வளர்ச்சியிலும் இந்திய மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. இந்தியாவுடனான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமாராக பதவியேற்றுக்கொண்ட நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி ரணிலின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த  பிரதமர் நரேந்திர மோடி,
 
அயலகத்திற்கு முதலிடம் கொள்கையில் இலங்கை மிகவும் முக்கியமானதொரு பங்காளியாக உள்ளது என்றும்  சகல பரிமாணங்களிலும் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான இருதரப்பு  கூட்டு தொலைநோக்கினை நனவாக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் மோடி ஜனாதிபதி ரணிலிடம் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேர்தலான இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடிய நிலையில், தொடர்ந்தும் 3ஆவது முறையாக பாரதப் பிரதமராக நரேந்திர மோடி நேற்று மாலை 7:21 சுப நேரத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
 
இதற்கான உத்தியோகபூர்வ பிரம்மாண்ட நிகழ்வு பன்னாட்டு தலைவர்கள் உள்ளிட்ட 9000 இராதந்திரிகளின் பங்கேற்புடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியிலுள்ள ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்றது.

அமைச்சரவை அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின்  கட்கரி, ஜகத் பிரகாஷ் நட்டா, சிவராஜ் சிங் சொவான், நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், மனோகர் லால் , எச். டி. குமாரசுவாமி,  பியூஸ் கோயல்,  தர்மேந்திர பிரதான், ஜீத்தன் ராம் மஜ்ஜி, ரஜிவ் ரஞ்சன் சிங், சர்பானந்தா சோனோவால்,  வீரேந்திர குமார்,  கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு , பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி, ஜுவல் ஓரம், கிரிராஜ் சிங், வைஷ்ணவி வைஷ்ணவ், ஆகியோரும் இதன் போது  பதவிப்பிரமானம் செய்துக்கொண்டனர்.

இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.