சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் நாட்டில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாதென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அரசியல் கட்சிகளின் கூட்டணி தொடர்பில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு போதிய தெளிவு இல்லை எனவும் அவர் ஊடகவியளாலர்களுக்கு தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அமைச்சரவையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் மாற்றங்களை மேற்கொண்டமை குறித்து பொதுஜன பெரமுனவினர் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், “அண்மையில் நடைபெற்றது அமைச்சரவை மாற்றம் அல்ல“ எனவும் ஒரு சில அமைச்சர்களின் பதவிகள் மாத்திரம் மாற்றப்பட்டதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைச்சரவை அமைச்சர்களை மாற்றுவதற்கான முழு உரிமையும் ரணில் விக்ரமசிங்கவுக்கு இருந்தாலும், கூட்டாக இணைந்து செயல்படும் போது அது தொடர்பில் கூட்டணியின் ஏனைய உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டியது அவரது கடமையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி அரசியலின் போது சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் போது கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டதன் பின்னரே எடுக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், சிறிலங்கா அரசாங்கத்தால் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களின் போது பொதுஜன பெரமுனவுக்கு அதன் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் இதனை தமது கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலர் அறிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின மற்றும் சுதந்திர கட்சிக்கு இடையில் பிரச்சினை இருப்பதாக காண்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் நாமல் ராஜபக்ச முற்றாக நிராகரித்துள்ளார்.
மேலும், இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது பொறுப்புக்களும் பதவிகளும் மாற்றப்படுவதன் மூலம் குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வை காண முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.