மைனா கோ கம போராட்டக்களத்திற்குள் நுழைந்த மர்மப் பெண்ணால் பரபரப்பு!

கொழும்பு அலரிமாளிகைக்கு முன்பாக 8 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டத்தில், ஒரு சில இளைஞர்கள் ஐந்து நாட்களாக உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போராட்டக் களத்திற்குள் மர்மப் பெண் ஒருவர் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கொழும்பில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மைனா கோ கம போராட்ட களத்துக்குள் மர்ம பெண் ஒருவர் நுழைந்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் இருந்த இடத்திற்கு சென்ற அந்த மர்மப் பெண்  அங்கிருந்தவர்களை உண்ணாவிரதத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் உணவை உண்ணுமாறும் கோரியுள்ளார்.

இதனை அவதானித்த மற்றைய போராட்டக்காரர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு கோரியுள்ளனர். இருப்பினும் மீண்டும் மீண்டும் அந்த உண்ணாவிரதத்தில் இருந்தவர்களை உணவை உண்ணுமாறு கோரிய போது, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களும் அந்த பெண்ணை கடுமையாகத் திட்டி வெளியே அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்து அப்பெண் வெளியேறிச் சென்று காலிமுகத்திடல் பகுதியில் இருந்த காவல்துறையினர் சிலருடனும் இனந்தெரியாத நபர்கள் சிலருடனும் மகிழ்ந்து கதைக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.