ரணிலின் ‘பி 2’ வீட்டினுள் நடந்த மர்ம படுகொலைகள் : பின்னணியில் கோனமுல்ல சுனில்

பட்டலந்த  சித்திரவதை முகாமுக்கும், படுகொலைகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்புண்டு.  வெண்மை நிற ஆடையணிந்து கொண்டு  மனித படுகொலையாளியாகவே அவர் செயற்பட்டுள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்   பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை  நடைபெற்ற   பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை  மீதான  விவாதத்தில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர்,

ரணில்  விக்கிரமசிங்க தனது அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி  பாதுகாப்பு தரப்பின் செயற்பாடுகளுக்கு தலையிட்டு, சட்டத்தின் செயற்பாடுகளுக்கும் இடையூறு விளைவித்துள்ளார்.
 
அத்துடன் ரணில் விக்கிரமசிங்க உட்பட அப்போதைய  சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் நளின் தெல்கொட ஆகியோர் பட்டலந்த  வீட்டுத் தொகுதியில்  சித்திரவதை முகாமை நடத்திச் செல்வதற்கு   மறைமுகமான வகையில் ஒத்தாசையளித்துள்ளார்கள்  

1988.01.01 முதல் 1990.12.31  ஆம்  திகதி வரையான காலப்பகுதியில் பட்டலந்த  வீட்டுத்தொகுதி  சித்திரைவதை முகாமுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
இதற்கு தீர்மானமிக்க  சாட்சிகள் உள்ளன என்று  ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.   சித்திரவதை முகாமில் பிரதான   வீடாக ‘பி 2’  இலக்க வீடு  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வீடு ரணில் விக்கிரமசிங்கவுக்கு சொந்தமானது. இந்த நாட்டில் 1983 ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை ஆணைக்குழு அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியை தடை செய்ததன் பின்னரே  வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. ஜே. ஆர்.  ஜயவர்தனவே அனைத்து வன்முறைகளுக்கும் ஆரம்ப புள்ளி வைத்தார்.

பட்டலந்த  சித்திரவதை முகாமுக்கும், படுகொலைகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்புண்டு. ஆகவே அவர் பொறுப்புக்கூறவேண்டும். வெண்மைநிற ஆடையணிந்துக் கொண்டு  மனித படுகொலையாளியாகவே இவர் செயற்பட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்வுக்கும், கோனமுல்ல சுனிலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ரணில் விக்கிரமசிங்கவின்  தூண்டுதலினால் தான் வன்முறைகள் இடம்பெற்றன.  இந்த குற்றங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும்.

வரலாற்றில் நாங்கள் அரசியல் செய்ததால் எமது சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.  உயிரிழந்தவர்களுக்கு நாங்கள் நீதியை பெற்றுக்கொடுப்போம். உண்மையான  குற்றவாளிக்கு சட்டத்தின் ஊடாக நாங்கள் தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்றார்.