3,300 அடி ஆழத்தில் தங்க முட்டை..! எந்த விலங்கினுடையது என ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்


அலாஸ்கா வளைகுடாவில் 3,300 அடி ஆழத்தில் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய 'தங்க முட்டை' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடலுக்கு அடியில் ஆய்வு மேற்கொண்டபோது இந்த முட்டை கண்டுபிடிக்கப்பட்டது.

முட்டை என சந்தேகிக்கப்படும் இந்த மர்ம பொருள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதற்கட்ட பரிசோதனையில் இது உயிரியல் தோற்றம் கொண்டது என தெரியவந்துள்ளது.

முட்டை வடிவிலான இந்த பொருள் வெடித்து சிதறியதால், ஏதேனும் உயிரினம் வெளியே வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த பொருள் எந்த விலங்கின் முட்டை என்பது யாருக்கும் தெரியாது, இப்படி ஒரு பொருள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த மர்மமான பொருளின் அகலம் 10 செ.மீ. இது உண்மையிலேயே முட்டையாக இருந்தால் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்படாத உயிரினமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் ஊடகங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.