நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை இழந்தது மொட்டு கட்சி

2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தின்கீழ் களமிறங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 17 போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்களைக் கைப்பற்றியது.

ஈபிடிபியின் இரு எம்.பிக்கள், தேசிய காங்கிரஸின் அதாவுல்லா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிள்ளையான், எமது சக்தி மக்கள் கட்சியின் அத்துரலிய ரத்தன தேரர் ஆகியோரின் ஆதரவும் மொட்டு கட்சிக்கு உரித்தானது. இதன்மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் மொட்டு கட்சி வசமானது. சுதந்திரக்கட்சியின் அங்கஜனும் அரசுக்கு நேசக்கரம் நீட்டினார்.

புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் தேசியக் கூட்டணி சார்பில் களமிறங்கிய அண்மைக்காலத்தில் ‘தங்க மகன்’ என பெயர்பெற்ற அலிசப்ரி ரஹீமும் ஆளுங்கட்சி பக்கம் தாவினார். டயானா கமகே உட்பட மேலும் சில எதிரணி எம்.பிக்களும் அரசுடன் சங்கமித்தனர்.

இவ்வாறு நாடாளுமன்றத்தில் பெரும் பலத்தைக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆட்சி மக்கள் போராட்டத்தில் ஆட்டம் கண்டது. 2022 மே 9 ஆம் திகதி பிரதமர் பதவியை மஹிந்த துறந்தார். அதன்பிறகு ஜனாதிபதியாக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்சவும் நாட்டை விட்டு ஓடினார்.

2022 மே மாதம் முதலே மொட்டு கட்சி, கூட்டணி பிளவை சந்திக்க ஆரம்பித்தது. பங்காளிகளும் கூட்டணியில் இருந்து வெளியேறினர். எனினும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மொட்டு கட்சி எடுத்துள்ள முடிவால் அக்கட்சி தற்போது பெரும் பிளவை – நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த ஏழு பங்காளிக்கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம் பக்கம் வளைத்து போட்டுள்ளார். மொட்டு கட்சியின் உறுப்பினர்களையும் தன் பக்கம் இழுத்துள்ளதார்.

இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாமல் தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளது. புலிகளை உடைத்ததுபோல, மொட்டு கட்சியையும் ரணில் உடைத்துவிட்டார் என நாமலும் புலம்பி வருகின்றார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈபிடிபி, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி (கருணா), முற்போக்கு தமிழர் கழகம் (வியாழேந்திரன்) , சுதந்திரக்கட்சி (நிமல் சிறிபாலடி சில்வா அணி) என்பனவே ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.

மொட்டு கட்சியின் 50 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் குழுவொன்றின் ஆதரவையும் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

மொட்டு கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த தேசிய சுதந்திர முன்னணி, பிவிருது ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, யுத்துகம அமைப்பு என்பனவும் மொட்டு தரப்பை கைவிட்டு புதிய கூட்டணியை அமைத்துள்ளதால், அக்கட்சி அரசியல் ரீதியில் மொட்டு கட்சி அநாதையாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசம் சாதாரண பெரும்பான்மை பலம்கூட (113) இல்லை. ஆளும் மற்றும் எதிரணியை சேர்ந்த 92 எம்.பிக்கள் ரணில் பக்கம் உள்ளனர். மேலும் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.