முல்லைத்தீவு பதற்றத்திற்கு காரணம் என்ன?


முல்லைத்தீவு - விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(18) இரவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தபோது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது இதனை தொடர்ந்து அங்கு கூடிய இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பத்தினை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு பதட்டமான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. 

இளைஞர்கள் மீது அங்கு கடமையில் நின்ற இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் இளைஞர்கள் சிலர் காயமடைந்த நிலையில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இரு தரப்பிற்கும் இடையில் கைகலப்பாக மாறியதில், பொதுமக்களின் வாகனங்கள் சில சேதமடைந்த நிலையில் இராணுவத்தினரின் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் தாக்குதலில் இளைஞர்கள் பலர் காயமடைந்துள்ள தோடு பொதுமக்களின் தாக்குதலில் இராணுவத்தினர் சிலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் அங்குள்ள இராணுவ காவலரண் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து நிலமையினை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் வானத்தினை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்  

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பு வீதியில் விசுவமடு பகுதியில் எவரும் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுதோடு அங்கு அதிகளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுமிருந்தனர்  

தாக்குதல் பின்னணி...

நேற்று (18) காலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் பெற வந்தவர் (குறித்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டவர்) எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள இராணுவ காவலரன் இராணுவத்தினருடன் முரண்பட்டபோது இராணுவத்தினர் குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த நபர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் இராணுவத்தினர் அவருக்கு சிகிச்சையளித்து விட்டு இராணுவ காவலரனில் தடுத்து வைத்திருந்தனர்.

மாலையில் அங்கு கூடியிருந்த மக்கள் குறித்த நபரை விடுமாறு இராணுவத்தினரை கேட்டிருந்தனர். குறித்த நபரை இராணுவம் விடவில்லை. இதனால் இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சோடா போத்தல்கள் மற்றும் தடிகள் கொண்டு தாக்கினர். இருதரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்ததை அடுத்து இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

மக்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்காக இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து. மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து குறித்த பகுதியில் இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டு குறித்த பகுதியை இராணுவத்தினரும் பொலிஸாரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.