அசாதாரண காலநிலை காரணமாக வரக்காபொல - கும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் மீது நேற்று (14) மாலை மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்த நிலையில் அதில் சிக்குண்டிருந்த பெண்ணின் உடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கேகாலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண்ணின் மூத்த மகன் மண் சரிவுக்கு அடியில் சிக்கியுள்ள நிலையில் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருகின்றன.
அனர்த்தம் இடம்பெற்ற போது, குடும்பத் தலைவரை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அவர் சிகிச்சைக்காக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்தின் போது, உயிரிழந்த பெண்ணின் பத்து வயதான இளைய மகன், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் தற்போது தனது நண்பரின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் வரக்காபொல காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            