பள்ளிவாயல்களும், இந்து ஆலயங்களும்.. முஸ்லிம்களிடம் இருந்து தமிழ் மக்கள் கற்றுக்கொள்ளவேண்டும்..


நேற்றைய தினம் காத்தான்குடி நகரில் முஸ்லிம் மக்களால் கடையடைப்பு போராட்டமும் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை நாட்டையே உலுக்கிய ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் காரணமாக சிறுவர்கள் பெரியோர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்த நிலையில் சஹரானால் பாவிக்கப்பட்டு வந்த பள்ளிவாசலானது சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

அந்தப் பள்ளிவாசலை மீள வழங்க கோரியே காத்தான்குடி முஸ்லிம் மக்கள் அந்தக் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்ததிருந்தார்கள்.

‘சஹரான் தங்களது காத்தான்குடி நகருக்கு ஒரு அவமானம்..’என்றும் ‘..சகாரானின் அந்தப் பள்ளிவாசலை உடைத்து தரைமட்டமாக்க வேண்டும்..’என்றும் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் காத்தாங்குடி மக்கள் கோரிக்கை வெளியிட்டுவந்தார்கள்.

கடந்த காலங்களில் குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக காத்தாங்குடியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாயல் சமூகத்தினர் எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த போதிலும் நேற்றைய தினம் அந்தப்பள்ளிவாசலினை விடுவிக்குமாறு அந்த மக்கள் போராடமுன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பயங்கரவாத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு வணக்கஸ்தலதை வெறும் மூன்றே ஆண்டுகள் கூட மூடியிருக்க அனுமதிக்காத முஸ்லிம் மக்களின் அந்த உணர்வுகளைப் பாராட்டுகின்ற அதேவேளை, சுமார் 30 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற இந்து ஆலயங்கள் பற்றி தமிழ் மக்கள் ஏன் எந்தவிதப் பிரஞ்ஞையுமற்று இருக்கின்றார்கள் என்ற கேள்விக்குத்தான் எங்களால் பதில்தேடமுடியாமல் இருக்கின்றது.

1990ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் ஏராளமான இந்து ஆலயங்கள் மாற்று சமூகத்தினரால் அபகரிக்கப்பட்டு, அவற்றில் இறைச்சிக்கடை வைக்கப்பட்ட சம்பவங்களும், அரச கட்டிடங்கள் கட்டப்பட்ட நிகழ்வுகளும் நடந்தேறியிருந்தன.

ஓட்டைமாவடியில் இந்து மக்களின் ஒரு மாயாணத்தை தனது அதிகாரத்தைப் பாவித்து கைப்பற்றி அதில் அரச அலுவகம் கட்டியதாக முன்நாள் அமைச்சர் ஹிஸ்புல்லா இறுமாப்புடன் பகிரங்கமாக கூறியிருந்ததும் இங்கு அனைவரும் அறிந்த ஒரு விடயம்.

வீரமுனைப் பிள்ளையார் கோவில், நிந்தவூர் முருகன் கோயில், கரவாகு காளி கோவில், மீனோடைக்கட்டு பிள்ளையார் கோவில், சம்மாந்துறை காளி கோயில், காரைதீவு கண்ணகியம்மன் கோவில், அட்டைப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில், ஓட்டைமாவடி பிள்ளையார் கோவில், இவை உட்பட 1990ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட ஏராளமான இந்து ஆலயங்கள் தெடர்ந்து மக்கள் வழிபடுவதற்கு முடியாதவைகளாகவே இருந்துவருகின்றன.

அந்த ஆலயங்களை மீட்பதற்கு எதாவது ஒரு அகிம்சைப் போராட்டதை ஏன் இந்து அமைப்புகளோ அல்லது தமிழ் அரசியல் கட்சிகளோ இதுவரை முன்னெடுக்கவில்லை?

குறைந்தது ஒரு வேண்டுகோளைக்கூட இதுவரை யாரும் முன்வைக்கவில்லையே ஏன்?

முஸ்லிம் மக்களைப் பார்த்து தமிழ் மக்கள் பல விடயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்.