கொழும்பில் காலையில் நடந்த துயரம் : ஐவர் பரிதாபமாக பலி - CCTV காணொளி வெளியானது

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அரச பேருந்து மீது மரம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்து தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.  

இந்த விபத்தில் ஐவர் உயிரிழந்ததோடு பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


இரண்டாம் இணைப்பு

தெனியாயவிலிருந்து கொழும்பு வந்து கொழும்பிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் மத்துகம நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பேருந்தில் பயணித்தவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், ஐவர் உயிரிழந்துள்ளதுடன் அவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிரிந்தவர்களுக்கான இறுதிச்சடங்கினை மேற்கொள்ள தலா ஐந்து இலட்சம் ரூபா வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. 


முதலாம் இணைப்பு

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் காலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

லிபெட்டி பிளாசா அருகில் பேருந்து ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று விழுந்தமையால் விபத்து ஏற்பட்டுள்ளது. .

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தில் பயணித்த மாணவர்கள் பலர் காயமடைந்த நிலையில் மேலும் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.